சினிமா என்ற மாய உலகம் ஒரு விசித்திரமான உலகம். குழந்தை நட்சத்திரமாக வந்து புகழ் பெற்றவர்களும் இங்கு உண்டு: குழந்தைக்குக் குழந்தை பிறந்த பின்னும் சின்னச் சின்ன வேடங்களில் வந்து செல்பவர்களும் இங்கு உண்டு. முதல் படத்திலேயே உச்சத்துக்குச் செல்லும் இயக்குனரும் உண்டு: முப்பது ஆண்டுகளுக்குப் மேலும் உதவி இயக்குனராகவே மிஞ்சும் மனிதர்களும் உண்டு. ஏன் இந்த ஏற்றத் தாழ்வுகள்? புகழ் பெற்ற சில சினிமா நடிகர்களின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்ததில் சில முக்கியமான விஷயங்கள் கிடைத்தன. சினிமா உலகில் சாதிக்க எண்ணும் இளைஞர்களுக்காக அவை இங்கே தரப்படுகின்றன. இவை மிக மிகத் துல்லியமான முடிவுகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பெரும்பாலும் இவை மிகச் சரியாகவே இருக்கும்.
சுக்கிரன் என்ற கிரகம் மட்டுமே கலைகளையும், கற்பனைகளையும் வளர்க்கின்ற கிரகமாகச் சொல்லப்படுகின்றது. சந்திரனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டு கிரகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு நாம் சில முடிவுகளுக்கு வந்திருக்கின்றோம். அவைகளைக் கீழே தருகின்றோம்.
- சுக்கிரன், சந்திரன் என்ற இரண்டு கிரகங்களுமோ அல்லது இவற்றில் ஒன்றோ மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், மீனம் என்ற இந்த ஆறு இராசிகளில் ஒன்றில் இருக்க வேண்டும்.
- சுக்கிரன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் தமது சொந்த நவாம்சராசியான ரிஷபம், துலாம் அல்லது கடகத்தில் இருக்க வேண்டும்.
- சுக்கிரனின் நவாம்சபதி (சுக்கிரன் நவாம்சத்தில் யாருடைய வீட்டில் இருக்கின்றதோ அந்தக் கிரகம்) மேஷம், கடகம், துலாம், மகரம், சிம்மம், தனுசு ஆகிய இராசிகளில் ஏதேனும் ஒன்றில் இருக்க வேண்டும்.
- சுக்கிரன் லக்னத்துக்கு 2, 5, 8, 11 ஆகிய பாவங்களில் ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும்.
- சந்திரனுக்கோ, சுக்கிரனுக்கோ ஆறு அல்லது ஒன்பதாம் இடத்துச் சம்பந்தம் இருக்க வேண்டும்.
- சனியின் நவாம்சபதி லக்னத்துக்குக் கேந்திரங்களான 1, 4, 7, 10-ல் இருக்க வேண்டும். அல்லது சனி 1, 4, 7, 10-ல் இருக்க வேண்டும்.
- ஏழாமிடத்ததிபதியோ அல்லது அந்தக் கிரகத்தின் நவாம்சபதியோ சுக்கிரனுக்குக் கேந்திரங்களான 1, 4, 7, 10-ல் இருந்தாலோ அல்லது சுக்கிரனாகவே இருந்தாலோ புகழ்பெற்ற நடிகராகும் வாய்ப்பு உண்டு.
- பொதுவாக உத்தராயணத்தில் மிகச்சிறந்த நடிகைகளும், தட்சிணாயனத்தில் மிகச் சிறந்த நடிகர்களும் பிறக்கின்றார்கள்.
- 3, 6, 9, 12-க்குடைய கிரகங்கள் சுக்கிரனுக்கோ, லக்னத்துக்கோ கேந்திரங்களில் நின்றால் புகழ் எளிதில் கிடைத்து விடுகிறது.
இவை சில முக்கியமான குறிப்புக்கள். சுக்கிரன், வியாழன், சூர்யன், சனி ஆகிய கிரகங்களின் தசாபுத்தி காலங்கள், சுக்கிரனின் அஷ்டவர்க்கம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தால் இந்தப் பிரபலங்களின் புகழ், சினிமாத் துறையில் அவர்கள் காலூன்றி நிற்கின்ற காலம், போன்றவற்றையும் சொல்ல முடியும். சோதிடத்தில் ஆராய்ச்சி செய்கின்றவர்கள் மேற்கூறப்பட்ட விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. மேலே சொல்லப்பட்ட குறிப்புக்களில் சந்திரனுக்குப் பதிலாகப் புதனை எடுத்துக்கொண்டு பார்த்தால் எழுதி இயக்கும் இயக்குனர்கள் கிடைப்பார்கள். இரண்டுக்குடையவனோ, அவனது நவாம்சபதியோ கேந்திரங்களில் நின்று புதனுக்கும் கேந்திரங்களில் இருந்தால் நடிகர்களுக்குப் பதிலாக இயக்குனர்கள் கிடைப்பார்கள்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.
