வழக்கம்போல் குருப்பெயர்ச்சியைப் பற்றிய புத்தகங்களும் கட்டுரைகளுமாகத் தமிழகம் நிரம்பிக் கிடக்கின்றது. தமிழ்நாட்டில் எத்தனையோ விசயங்களில் வறட்சி பாதித்திருக்கும்போது குருப்பெயர்ச்சியைப் பற்றிய முழக்கங்களுக்கு மட்டும் வறட்சியே கிடையாது. அதுவும் இந்த ஆண்டு தாமிரபரணி நதிக்கரையில் மகாபுஷ்கர விழா வேறு நடக்கப் போகின்றது. சுமார் 60 வருடங்களாகத் தாமிரபரணி நதியைப் பார்த்தும், கடந்தும் போகின்ற எமக்கு இந்தத் தாமிரபரணி நதியின் அழகையும், ஆன்மாவையும் சிதைத்து, அதை அழிவின் விளிம்புக்கு எடுத்துச் சென்றிருக்கும் மணற்கொள்ளையர்கள்தாம் ஞாபகத்துக்கு வருகின்றார்கள். அரசின் அத்தனை அங்கங்களுமே இந்த இயற்கை அழகின் சிதைவுக்குக் காரணம்தான். எமது வாழ்வின் வளமான நினைவுகளுக்கும், எமது கவித்துவ உணர்ச்சிகளின் அத்தனை நாட்டியத்துக்கும் தாமிரபரணிதான் சாட்சி. அந்நதிக்குப் பொய் அலங்காரங்கள் செய்து வைக்கும் புஷ்கர விழாவை ஒட்டி, விருச்சிக ராசிக்குப் பிரவேசம் செய்யும் குருப்பெயர்ச்சிப் பலன்களை இங்கு எழுதுகின்றோம்.

வழக்கமான குருப்பெயர்ச்சிப் பலன்களை இங்கு எதிர்பார்த்தால் வாசகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். வாழ்க்கையில் நடக்கும் எல்லாவிதமான சுபமான காரியங்களுக்கும் குருதான் காரணம் என்றும், அனைத்துச் சோகமான நிகழ்வுகளுக்கும் சனிதான் காரணம் என்றும், நம்பும் சாமானிய மக்களுக்கு நமது கருத்துக்கள் புரியாது. ஆனால் ‘நாம் படித்ததைப் பிறர்க்குச் சொல்வோம்’ என்பதில் நாம் உறுதியாக இருப்பதால் இக்கட்டுரையை எழுதத் துணிந்தோம்.

அக்டோபர் 11-ம் நாள் இரவு மணி 7.20-க்குக் குரு விருச்சிக ராசியில் நுழைகின்றது. குரு ஒருவரது ஜன்ம காலத்தில் எந்த ராசியில் இருக்கின்றதோ அந்த ராசிக்கு 1, 2, 3, 4, 7, 8, 10, 11 ஆகிய இடங்களுக்குக் கோசார ரீதியாய் வரும்போது சுப பலன்களை அளிக்கும் என்று சொல்லப்பட்டிருப்பதால் 5, 6, 9, 12 ஆகிய இடங்களில் வரும்போது நல்ல பலன்கள் குறையும் என்று தீர்மானித்துக்கொள்ள வேண்டும். எனவே கடகம், மிதுனம், மீனம், தனுசு ஆகிய இராசிகளில் குரு இருக்கப் பிறந்தவர்கள் அதிகமான நற்பலன்களை எதிர்பார்க்கக் கூடாது. ஒருவரது ஜன்மலக்னத்துக்கு 1, 2, 4, 5, 6, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் குரு பலன்களைக் கொடுக்கின்றது என்றும் 3, 8, 12 ஆகிய இடங்களில் வரும்போது பலன்களைத் தராது என்றும் சொல்லப்பட்டிருப்பதால் விருச்சிக குரு, கன்னி, மேசம், தனுசு ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு பலன்களைத் தராது.

ஒருவரது ஜன்ம ஜாதகத்தில் சனி இருக்கும் ராசியிலிருந்து 3, 5, 6, 12 ஆகிய இடங்களில் வரும்போது குரு பலன்களைத் தரும் என்று சொல்லப்பட்டிருப்பதால் கன்னி, கடகம் , மிதுனம், தனுசு ஆகிய இராசிகளில் சனி இருக்கப் பிறந்தவர்களுக்கு மட்டும் குரு பலன்களையளிக்கும். ஒருவர் தனுசு லக்னத்தில் பிறந்து அவருக்குச் சனி பத்தாமிடத்தில் கன்னியில் இருக்குமானால், சனியிடமிருந்து நல்ல இடத்துக்குக் குரு வருவதால் பலன் தருவதாகவும், லக்னத்துக்குப் பன்னிரண்டில் வருவதால் பலனைத் தராததாகவும் மாறி ஒரு பலனுமே நடக்காது.

எனவே அஷ்டவர்க்க முறைப்படி (லக்னம், சூர்யன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என்ற இந்த எட்டும் சேர்ந்த இந்தக் கணக்கில் ) 4 இடங்கள் பலன்களைத் தருபவை ஆகவும் , 4 இடங்கள் பலன்களை மறுப்பவை ஆகவும் இருந்தால் , இந்த வருடம் எந்தவிதமான நற்பலன்களின் வரவும் அல்லது கெட்ட பலன்களின் வரவும் இன்றி வீணாகக் கழியும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு இங்கு குரு, லக்னம், சனி ஆகிய மூன்றின் அஷ்டவர்க்கப் பலன் மட்டுமே கொடுத்தோம். மீதமுள்ள 5 வர்க்கப் பலன்களைத் தெரிந்து கொள்ள ‘அஷ்டவர்க்கம்’ என்ற கட்டுரையில் உள்ள குருவின் அஷ்டவர்க்க அட்டவணையைப் படித்துத் தெரிந்து கொள்ளவும்.

ரிசபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய இராசிகளில் செவ்வாயோ, சனியோ இருக்கப் பிறந்தவர்களுக்கு, விருச்சிக குரு எழுச்சி, வீழ்ச்சி இரண்டையும் தரவல்லதாகும். ஜாதகத்தில் செவ்வாய், சனி இருக்கும் பாகைகளுக்குச் சரியான பாகையில் விருச்சிகத்தில் குரு நகரும்போது அக்கிரகங்களின் 4, 7, 10ம் பார்வைகள் விழுவதால் சிலருக்குத் திடீரென்று உயர்வும், சிலருக்குத் தாழ்வும் கிடைக்கும். கேந்திரப் பார்வைகள் சில சமயங்களில் நல்லதையும் செய்கின்றன என்பதை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம். அவை நல்லதா அல்லது கெட்டதா என்பதைத் தனிப்பட்ட நபரின் ஜாதகம்தான் தீர்மானிக்கும்.

எல்லாவற்றையும்விட ஒரு குறிப்பிட்ட வயது பிறக்கும் நாளில் எழுதப்படும் வருசப்ரவேச ஜாதகம் முக்கியமானது. அந்த வருசப்ரவேச ஜாதகத்தில் லக்னத்துக்கு 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் இருக்கும் குரு பலனைச்செய்யும் கிரகமாகவும் 1, 2, 4, 5, 7, 8, 9, 12 ஆகிய இடங்களில் இருக்கும் குரு பலன்களைத் தராத கிரகமாகவும் மாறிவிடுவதால் நாம் குருப்பெயர்ச்சியை மட்டுமே முழுவதுமாக நம்பி இருக்கக்கூடாது.

அஷ்டவர்க்கம், வருசப்ரவேச ஜாதகம் இவ்விரண்டையும் கணக்கில் எடுக்காமல் எழுதப்படும் குருப்பெயர்ச்சிப் பலன்களை வாசகர்கள் உதாசீனப்படுத்த வேண்டும் என்பதே எமது ஆசை. பொய்களை விலக்கும் துணிவே ஞானம் என்பது எமது கருத்து.

 

This Week’s Quote:

Science is a way of thinking much more than it is a body of knowledge.

-  Carl Sagan

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.