இந்த வலைத்தளத்தை நாம் ஆரம்பித்த போது, சோதிடம் சம்பந்தமான சில அடிப்படைக் கேள்விகள் வாசகர்களுக்கு இருக்கக்கூடும், அவற்றைத் தெளிவுபடுத்தலாம் என்றுதான் நாம் நினைத்தோம். இந்த மூன்றாண்டுகளில் நாம் புரிந்து கொண்டது இதுதான். நமது மக்களுக்குச் சோதிடம் பற்றிய அடிப்படைக் கேள்விகள் மட்டுமல்ல. எந்த விச யத்திலும் கேள்விகள் இல்லை என்பதுதான். சபாக்களில் நடக்கும் கதாகாலட்சேபத்துக்குக் கூடும் கூட்டம், அறிவியல் சம்பந்தமான அரங்குகளுக்கு வருவதில்லை. ஸ்ரீமத்பாகவதம் பற்றிச் சொற்பொழிவாற்ற வருபவர் சென்ற ஆண்டு எப்படிக் கதை சொன்னாரோ, அதே கதையை அப்படித்தான் இந்த ஆண்டும் சொல்வார். அடுத்த ஆண்டும் அதே கதையை அப்படித்தான் சொல்வார். ஆனால் கூட்டம் மட்டும் அதிகரித்துக்கொண்டே போகும். புதிய விச யங்களைக் கற்றுக்கொள்வதிலும், சோதனை செய்து பார்ப்பதிலும் ஆர்வம் காட்டாத நமது மக்கள் வணிகமயமாக்கப்பட்ட அட்சய திருதியை, மகாபுஷ்கர விழா என்ற புராண நம்பிக்கைகளுக்காக லட்சக் கணக்கில் செலவு செய்கின்றார்கள்.
சோதிடம் சம்பந்தமான விச யங்களிலும் நமது மக்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள். பரிகாரம், குலதெய்வ வழிபாடு பற்றித்தான் அதிகம் கவலைப்படுகின்றார்களே தவிர சோதிடம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள முயல்வதில்லை. குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, சந்திராஷ்டமம் என்பதைத் தவிர வேறு எந்தச் சொல்லும் அவர்களுக்குப் புரிவதில்லை. நமக்கு வரும் கேள்விகளைப் படித்தால் அவர்களின் அறியாமை மட்டுமல்ல, அச்சமும் தெரிய வருகின்றது. சனியின் நட்சத்திரத்தில் இருந்து ஒரு கிரக தசை நடக்கப் போகின்றதே, அதனால் கெடுதல் வருமா, எட்டில் ஒரு கிரகம் மறைந்துவிட்டதே, அதனால் என் உயிருக்கு ஆபத்து வருமா என்ற கேள்விகள்தாம் அதிகம் வருகின்றன. வணிகச் சோதிடர்கள் எந்த அளவுக்கு மக்களைப் பயமுறுத்தியிருக்கின்றார்கள் என்பதற்கு இதுதான் சான்று.
நமது வலைத்தளத்தின் நிர்வாகி நீங்கள் உங்களது சிஷ்யரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என்று சமீபத்தில் எம்மைக் கேட்டார். ‘ஒரு நல்ல சிஷ்யனைக் கண்டுபிடிப்பதே இந்த வலைத்தளத்தின் நோக்கம்’ என்று ஆரம்பத்தில் அவரிடம் சொன்னதை நினைவில் வைத்திருந்து அவர் இதைக் கேட்டிருக்கின்றார். எமது விடை இதுதான் . இன்னும் நூறாண்டுகள் கழிந்தாலும் எமக்குச் சிஷ்யர்கள் கிடைக்கப் போவதில்லை. எமது தந்தையார் மூன்று சோதிட அறிஞர்களிடம் கணிதம் பயின்றார். மூன்று பேருமே ஒரு கட்டத்தில் அவரைத் தங்களுக்கு மேலாகக் கற்றவர் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இருவர் அதை அவர்களது வாய்மொழியாகவே சொல்லிவிட்டார்கள். ஒருவர் மனந்திறந்து சொல்லவில்லை. ஆனால் அவரது சில குறிப்புக்கள் மூலம் அதை அவர் வெளிப்படுத்தினார். (எமது தந்தையாரின் மூன்று குருக்களுமே அந்தணர்கள்)
நமது ‘போஸ்ட்மார்ட்டம்’ என்ற கட்டுரையைப் படித்த வாசகர் ஒருவர் அவரது ஜாதகத்தை அனுப்பிச் சில கேள்விகள் கேட்டுள்ளார். முக்கியமான கேள்வி அவரது ஆயுளைப் பற்றியது. ஏனெனில் அவருக்கு லக்னாதிபதி எட்டில் இருக்கின்றது. லக்னாதிபதி எட்டில் இருந்து எண்பது வயதுக்குமேல் வாழ்ந்த பல பெரியவர்களின் ஜாதகங்கள் நம் வசம் உள்ளன. இருந்தாலும் அந்த வாசகரின் பயத்தைப் போக்க எமது தந்தையாரின் ஜாதகத்தைத் தருகின்றோம்.


ராகுதசையில் இருப்பு 4 வருச ம் 4 மாதம் 28 நாட்கள். 20 வருடம் 4 மாதம் 28 நாட்கள் முடிய குரு தசையும், 39 வருடம் 4 மாதம் 28 நாட்கள் முடிய சனி தசையும் , 56 வருடம் 4 மாதம் 28 நாட்கள் முடிய புத தசையும் , 63 வருடம் 4 மாதம் 28 நாட்கள் முடிய கேது தசையும், அதற்குமேல் சுக்கிர தசையும் நடந்தன. லக்னாதிபதி எட்டில் மறைந்துவிட்டதால் , சந்திரனின் நட்சத்திரத்தில் பாதகஸ்தானத்தில் இருந்து தசை நடத்தும் குரு தசையில் அவர் இறந்து போவார் என்றும், அதைத்தாண்டினால் எட்டில் உள்ள அட்டமாதிபதி சனி தசையில் அவர் நிச்சயம் இறந்து போவார் என்றும் சோதிடர்கள் கூறியிருக்கின்றார்கள். அதனாலேயே அவருக்கு 23 வயதில் திருமணம் செய்து வைத்திருக்கின்றார்கள். இதையெல்லாம் கேள்விப்பட்ட என் தந்தையார் அந்தச் சோதிட சாத்திரத்தை நாமே கற்று நமக்கு வரும் நல்லது கெட்டதுகளைத் தெரிந்துகொள்வோமே என்றுதான் தனது 30 வயதுக்குப் பின்னர் சோதிடம் கற்கப் போனார்.
சனி தசையும், மூன்று ஆறுக்குடைய புத தசையும் (புதன் சனியின் நட்சத்திரத்தில்) கேது தசையும் (கேது,பாதகஸ்தானமான ஏழில், பாதகஸ்தானத்தில் இருக்கும் செவ்வாயின் நட்சத்திரத்தில்) நடந்து முடிந்த பின்னரும் அவருக்குக் கெடுதல் ஏதும் நடக்கவில்லை. சுக்கிர தசையின் கடைசியில்தான் எண்பது வயதில் அவரது மரணம் நிகழ்ந்தது. எனவே லக்னாதிபதி எட்டில் மறைந்துவிட்டது. பாதகஸ்தானத்தில் உள்ள கிரகத்தின் தசை நடக்கின்றது. அட்டமாதிபதியின் நட்சத்திரத்தில் இருக்கும் கிரகத்தின் தசை நடக்கின்றது என்றெல்லாம் வணிகச் சோதிடர்கள் பயமுறுத்தினால் அதைப் புறக்கணிக்குமாறு நாம் நமது வாசகர்களைக் கேட்டுக் கொள்கின்றோம். நமது கட்டுரைகள் ஒவ்வொன்றையும் ஆழ்ந்து படித்தால் இந்த மாதிரி அச்சப்படுவதற்கு அவசியமில்லை என்ற உண்மை புரியும். நாம் ஏற்கனவே எழுதியுள்ளது போல் வாழ்க்கை 12 கட்டங்களில் இல்லை. அது ஆயிரக்கணக்கான கட்டங்களில் உள்ளது.
This Week’s Quote:
Small amounts of philosophy lead to atheism, but larger amounts bring us back to God.
- Francis Bacon
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.