முகம் காட்டும் கண்ணாடி போன்று அகம் காட்டும் கண்ணாடி ஒன்று இருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! ஆனால் காலத்தைக் காட்டும் ஒரு கண்ணாடியாகக் கிரக நிலைகள் இருக்கின்றன. கிரகங்களின் மொழி நமக்குப் புரியாததால்தான் நாம் காலக்கண்ணாடியைக் கவனிக்க முடியாமல் வாழ்கின்றோம். சோதிடத்தின் பயன்பாடு கிரகங்களின் மொழியை அறிவதே! சென்ற கட்டுரையில் 28.10.1949 மாலை மணி 4.20க்குப் பிறந்த ஒரு பெண்மணியின் 19-வது வயதில் திருமணம் நடக்கலாம் என்று கணித்தோம். அப்பெண்மணியின் 19-வது வருஷப் பிரவேச ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

| இராசி | பாகை | கலை | |
| லக்னம் | 6 | 24 | 46 |
| சூர்யன் | 6 | 11 | 31 |
| சந்திரன் | 4 | 13 | 45 |
| செவ்வாய் | 8 | 10 | 59 |
| புதன் | 6 | 19 | 32 (வக்ரம்) |
| குரு | 4 | 08 | 05 |
| சுக்கிரன் | 4 | 25 | 27 |
| சனி | 11 | 13 | 40 (வக்ரம்) |
| ராகு | 0 | 03 | 58 |
| கேது | 6 | 03 | 58 |



துலாம் ராசியில் 24 பாகை 46 கலை உதயமாகிறது. திருமணத்தைக் குறிக்கும் ஏழாம் பாவம் மேஷ ராசியில் 24 பாகை 46 கலையில் உள்ளது. ஏழாம் பாவாதிபதி செவ்வாய் சந்திரனோடு திரிகோண பார்வையில் உள்ளது. சந்திரன் உபசய ஸ்தானமாகிய பத்தாமிடத்தில் உள்ளது. ஜன்ம ஜாதகத்தில் ஏழாம் பாவாதிபதியாக வரும் புதன் ஜன்ம ஜாதகத்தில் கன்னிராசியில் 26 பாகை 37 கலையில் இருக்கிறது. வர்ஷப் பிரவேசகால ஏழாம் பாவமான மேஷம் 24 பாகை 46 கலையில் இருந்து புதனிருக்கும் தூரத்தை அளந்தால் புதன் ஆறாமிடத்தில் இருக்கிறது. அஷ்டவர்க்கப்படி புதன் பாவத்துக்கு ஆறாமிடத்தில் இருக்கலாம். வர்ஷப்பிரவேச கால ஏழாம் பாவாதிபதியான செவ்வாய் தனுசு இராசியில் 10 பாகை 59 கலையில் உள்ளது. ஜன்ம ஜாதகத்தில் ஏழாம் பாவமான கன்னிராசியில் 14 பாகை 53 கலையில் இருந்து செவ்வாய் அளக்கப்பட்டால் அது மூன்றாமிடத்தில் இருக்கிறது. செவ்வாய் அஷ்டவர்க்கப்படி பாவத்துக்கு மூன்றில் இருக்கலாம். ஏழாம் பாவத்தின் ஆரூடம் கடக ராசியில் 27 பாகை 12 கலையில் உள்ளது. ஏழாம் பாவத்தின் ஆரூடாதிபதி சந்திரன் லக்னத்துக்குப் பத்தாமிடத்தில் உள்ளது. (4 13 45 – 6 24 46 = 9 18 59) சந்திரன் ஒரு பாவத்துக்குப் பத்தாமிடத்தில் இருக்கலாம். இந்தக் காரணங்களால் திருமணம் விரைவில் நடக்கும் என்று துணிந்து கூறலாம்.
ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்து உத்தராயனம் தட்சிணாயனம் என்று பெயரிட்டிருக்கின்றார்கள். ஒரு பாவத்துக்குச் சந்திர சம்பந்தமிருந்தால் அப்பாவசித்தி தட்சிணாயனத்திலும் ஒரு பாவத்துக்குச் சூரிய சம்பந்தமிருந்தால் அப்பாவசித்தி உத்தராயனத்திலும் நடக்கும். ஏனெனில் சூர்யன் உத்தராயனத்தையும், சந்திரன் தட்சிணாயனத்தையும் குறிக்கின்றன. இப்பெண்மணியின் ஜனன ஜாதகத்தில் திரேக்காண லக்னத்துக்கு ஏழில் சந்திரன், குரு உள்ளன. வருஷப் பிரவேச ஜாதகத்திலும் திரேக்காண லக்னத்துக்கு ஏழில் சந்திரன் உள்ளது. ஏழாமிடம் தனுசாக வந்து குருவால் சிம்மத்திலிருந்து பார்க்கப்படுகின்றது. எனவே திருமணம் தட்சிணாயனத்தில் குருவுக்குச் சொல்லப்பட்ட ஹேமந்த ருதுவில் நடைபெறும் என்று முடிவு செய்யலாம். வர்ஷ ஆரம்பத்தில் குரு தசை 116 நாட்களுக்கு நடைபெறும். தசாநாதனும் குருவாக இருப்பதால் ஹேமந்தருது என்று நிச்சயமான முடிவுக்கு வரலாம்.
ஹேமந்த ருது 1967ல் அக்டோபர் 24 முதல் டிசம்பர் 22 வரை உள்ளது. பலதீபிகையின் இருபத்து நான்காவது அத்தியாயத்தில் சுக்கிரன் அஷ்டவர்க்கப் பலனைச் சொல்லுமிடத்தில் தட்சிணாயனத்தில் சுக்கிர நவாம்ச ராசியில் சூர்யன் வரும் போது அல்லது அதன் திரிகோணத்தில் சூர்யன் வரும் போது திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஜன்ம ஜாதகத்தில் சுக்கிரன் மீன நவாம்சத்தில் இருப்பதால் மீன, கடக, விருச்சிக ராசிகளில் சூரியன் வரும் போது திருமணம் நடக்கும் என்று கூறலாம். விருச்சிக ராசியில் சூரியன் நவம்பர் 16, 1967 முதல் டிசம்பர் 16, 1967 முடிய சஞ்சரிக்கின்றது. இப்பெண்மணியின் திருமணம் 1967 நவம்பர் 27ல் நடந்தது. (சுக்கிர நவாம்ச ராசிக்குத் திரிகோணத்தில் சூரியன் வரும் போது திருமணம் நடக்கும் என்பதைச் சில நேரங்களில் சுக்கிரனின் நவாம்ச ராசிக்கு ஏழாமிடத் திரிகோணங்களில் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.)

ஜாதகம் பற்றிய விஷயங்களைத் தேடிப் படிப்போர் கவனத்திற்கு
இந்தப் பெண்மணியின் ஜன்ம ஜாதகத்தில் லக்னாதிபதி குரு இருக்குமிடத்துக்கு வெகுசமீபத்தில் வருஷப் பிரவேச ஜாதகத்தின் ஏழாமதிபதி செவ்வாய் திருமணநாளில் வருகின்றது. வருஷப்பரவேச ஜாதகத்தின் ஏழாமதிபதி செவ்வாய் ஜன்ம ஜாதகத்தில் சிம்மத்தில் இருக்கிறது. அதற்கு வெகு சமீபத்தில் ஜன்ம லக்னாதிபதி குரு வருகிறது. ஜன்ம லக்னத்தின் ஏழாமதிபதி புதன் கன்னி ராசியில் 26 பாகை 27 கலையில் உள்ளது. திருமண நாளில் அதற்கு வெகு சமீபத்தில் வருஷப் பிரவேச ஜாதகத்தின் லக்னாதிபதி சுக்கிரன் வருகின்றது.
விவாகப் பொருத்தங்கள் பெண்களின் பெற்றோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பாகம் 2 என்ற கட்டுரையில் மூன்று உதாரண ஜாதகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் மூன்றாவது ஜாதகம் 14.10.1936 தேதியிட்ட ரிசப லக்ன ஜாதகம். அந்த ஜாதகமே இப்பெண்ணின் கணவர் ஜாதகம். அதையும் சேர்த்து ஆராய்ந்து பார்த்தால் திருமணம் ஏன் ஹேமந்த ருதுவில் நடைபெற்றது? ஏன் தட்சிணாயணத்தில் நடைபெற்றது? திருமண நாளில் கிரகங்கள் இருக்கும் இடங்கள் எவ்வளவு சுவாரஸ்யமான விஷயங்களைக் கொடுக்கின்றன? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்பெண்மணியின் லக்னாதிபதி குரு கணவரது ஏழாம் பாவாதிபதியான செவ்வாய் இருக்கும் சிம்மத்திலும், கணவரது ஏழாமிடத்ததிபதியான செவ்வாய் இப்பெண்மணியின் லக்னாதிபதியான குரு இருக்கும் மகரத்திலும் இடம் பெறுவது மட்டுமல்ல இன்னும் சில விஷயங்களும் கிரகங்களின் மொழி அறிந்தோருக்கு மட்டுமே தெரிய வரும்.
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.