கணிதமேதை ராமானுஜனின் ஜாதகம் என்ற கட்டுரையைப் படித்த வாசகர் ஒருவர் ராமானுஜனின் குறுகிய ஆயுளுக்கான காரணத்தை ஆயுர்த்தாயம் மூலம் விளக்க முடியுமா எனக் கேட்டிருந்தார். சோதிட ஆர்வலர்களுக்காக அந்த முயற்சியில் இறங்கியுள்ளோம். 

லக்னத்துக்குக் கேந்திரங்களில் பாபர்கள் இருக்கும் போது, சந்திரனும் பாபர் சம்பந்தம் அல்லது பார்வையைப் பெற்றுக் கேந்திரங்களில் இருந்தால், அது விரைவில் மரணத்தைக் கொண்டு வருகின்றது என்று பிருஹஜ் ஜாதகத்தின் அரிஷ்டாத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

ராமானுஜனின் ஜாதகத்தில் நான்காமிடத்தில் செவ்வாயும், ஏழாமிடத்தில் சூர்யனும் இருக்கும்போது, பத்தாமிடத்தில் உள்ள சந்திரன் செவ்வாயின் பார்வையைப் பெறுவதால் அரிஷ்டயோகம் கிடைக்கின்றது. வியாழனின் பார்வை அரிஷ்டயோகத்தைப் போக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் ஸ்ரீபதி பத்ததி கணித முறைப்படி வியாழனின் பார்வையைக் கணக்கிட்டால் 55 அலகுகள் (Unit) கிடைக்கின்றன. செவ்வாய், சனி, சூரியன் இவர்களின் பார்வையைக் கணக்கிட்டால் 129 அலகுகள் (Unit) கிடைக்கின்றன.

ஆயுளைக் கணக்கிடும் முறை – ஆயுர்த்தாயம் (தொடர்ச்சி..2) என்ற எமது கட்டுரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி ஆயுஷ் கலைகளைக் கணக்கிட்டால் சூர்யனுக்கு 14286 ஆயுஷ்கலைகள் கிடைக்கின்றன. சந்திரனுக்கு 18456 ஆயுஷ்கலைகள் கிடைக்கின்றன. சந்திரன் பத்தாம் பாவத்தில் இருப்பதால் 3155 கலைகளைக் குறைத்து, மீதம் உள்ள 15301 ஆயுஷ்கலைகள் கணக்கிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. சூர்யன் ஏழாம் பாவத்துக்குள் இருப்பதால் ஹரணமில்லை. 14286 கலைகள் மூலம் சூரியன் கொடுக்கும் தசாவருஷங்கள் 12 வருஷம் 6 மாதம் 23 நாள் 54 நாழிகை. 15301 கலைகள் மூலம் சந்திரன் கொடுக்கும் தசாவருஷங்கள் 17 வருஷம் 8 மாதம் 15 நாள் 25 நாழிகை. இவைகளைச் சேர்த்தால் கிடைப்பது 30 வருஷம் 3 மாதம் 9 நாள் 19 நாழிகை. இதைச் சௌரமான நாட்களாக மாற்றினால் 11058 நாட்கள் 10 மணி 58 நிமிஷங்கள் கிடைக்கின்றன. இதை ராமானுஜன் பிறந்த நேரமான 22.12.1887 மாலை மணி 6 நிமிடங்கள் 00 உடன் சேர்த்தால் 2.04.1918 காலை மணி 4 நிமிஷம் 58 கிடைக்கிறது. அதாவது சூரியதசை, சந்திரதசை முடிந்து, செவ்வாய் தசை 2.04.1918  4.58 A.M.-க்கு ஆரம்பிக்கிறது. இந்தச் செவ்வாய் தசை ஆரம்பிக்கும் வேளையில் உள்ள கிரக நிலைகள் கீழே தரப்படுகின்றன.

sample horoscope

 
  • தசாப் பிரவேச லக்னம் கும்பம். லக்னாதிபதி சனி ஆறாமிடத்தில் வக்ரம்.
  • சனியின் ராசியாதிபதி சந்திரன் நீசம். சந்திரனுக்குச் செவ்வாயின், வியாழனின் முழுப்பார்வை.
  • தசாதிபதி செவ்வாய் ஏழில் வக்கிரம்.
  • ஜன்ம ஜாதகத்தில் அமைந்திருப்பது போல இங்கேயும் சூரிய சந்திரர்களுக்குச் செவ்வாயின் பார்வை.

மேலே குறிப்பிட்டுள்ள யாவுமே செவ்வாய் தசை நற்பலனைத் தராது என்பதற்கான காரணங்கள். செவ்வாயின் தசா வருஷங்கள் 9 வருஷம் 5 மாதம் 28 நாட்கள். செவ்வாய் சத்ருவின் வீடான கன்னியில் (ராமானுஜனின் ஜன்ம ஜாதகத்தில்) இருப்பதால் 3ல் 1 பங்கு குறைத்தால், கிடைக்கும் வருஷங்கள் 6 மாதம் 3 நாட்கள் 29. எனவே 2.4.1918 முதல் 6 வருஷம் 3 மாதம் 29 நாட்களுக்குச் செவ்வாய் தசை நடைபெறும்.

செவ்வாய் ஜன்ம ஜாதகத்தில் அட்டமாதிபதி சனியால் 3ம் பார்வையால் பார்க்கப்படுவதால் மரணத்தைக் கொண்டுவரக் கூடிய காரணம் வலுவடைகிறது. மேலும் ராமானுஜனின் ஜாதகத்தில் ‘மிருத்யு ஸஹம்’ என்றழைக்கப்படும் புள்ளி மேஷத்தில் 2 பாகை 33 கலையில் உள்ளதால் செவ்வாய் மாரகஞ் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் மேலைநாட்டுக் கணக்கு முறைப்படி பார்த்தால் 33-வது வயதிற்கான (Progressed planetary positions) முன் நகர்த்தப்பட்ட கிரக நிலைகள் பாதகமாகவே இருக்கின்றன. 33-வது வயதைக் குறிக்கின்ற 33-வது நாளான 23.01.1888ல் முன்நகர்ந்த சூரியனும், சனியும் நேர் எதிரே உள்ளன. சூர்யன் மகரத்தில் 10 பாகை 42 கலையிலும், சனி கடகத்தில் 10 பாகை 47 கலைகளிலும் உள்ளன. சனி அட்டமாதிபதியாய் இருப்பதால் இப்பார்வை மரணத்துக்குச் சமமான கஷ்டத்தைக் கொண்டு வரலாம். மேலும் அந்நாளில் புதன் மகரத்தில் 13 பாகை 53 கலையில் இருந்து கடகத்தில் உள்ள ஜன்ம காலச் சனியை (கடகத்தில் 13 பாகை 10 கலை) நேர் எதிர்ப் பார்வையாகப் பார்க்கின்றது. புதன் லக்னாதிபதி சனி அட்டமாதிபதி. 

மேலே விவரிக்கப்பட்ட அனைத்தும் செவ்வாய் தசை அந்திமகாலத் தசை என்பதை உறுதிப்படுத்துகின்றன. 

கிரகஸ்புடங்கள், பாவஸ்புடங்கள், கிரகங்களின் பார்வையைக் கணக்கிட்டு அறியும் திறமை, தசாப்பிரவேச கால ஜாதகம் கணிக்கும் முறை இவைகளில் ஆழ்ந்தபரிச்சயம் ஒரு சோதிடருக்கு நிச்சயம் வேண்டும் என்பதை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.

புத்திக்கூர்மையும், தர்க்க ஞானமும் உள்ள வாசகர்களின் கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

 

  

This Week’s Quote:

Thoughts without content are empty, intuitions without concepts are blind.

Immanuel Kant.

 

 

ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.