மின்னஞ்சல் மூலம் நமக்கு வரும் கேள்விகள் மூலம், நாம் புரிந்து கொண்ட விசயம் என்னவெனில், நமது மக்களுக்கு கேள்விகள் கேட்கத் தெரியவில்லை என்பதுதான். குழப்பமான மனநிலையில் இருப்பவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜாதகத்தில் விடை கிடைக்காது. ஏனெனில் நாம் ஜாதகத்தையும், கேள்விகள் நமக்கு வரும் நேரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டே பலன் சொல்லுகின்றோம். எந்தவித அச்சமும், குழப்பமும் இல்லாமல் மனம் தெளிவாக இருக்கும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டுமே சரியான விடை கிடைக்கும்.
நாம் தொழில்முறைச் சோதிடர் இல்லை. சில நண்பர்கள் மட்டுமே என்னிடம் நெருங்கிச் சோதிடம் பார்ப்பவர்களாக இருக்கின்றார்கள். எனவே உங்கள் வங்கிக் கணக்கு எண் தாருங்கள், எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்றெல்லாம் சிலர் கேள்விகள் அனுப்புகின்றார்களே, அவர்களுக்கெல்லாம் இந்தக் கட்டுரை மூலம் பதிலளிக்கின்றோம். நாம் பணம் பெற்றுக்கொண்டு ஜாதகம் பார்ப்பதில்லை. நாம் கற்றதைப் பிறர்க்குக் கற்றுக்கொடுப்போம் என்பதே நாம் கட்டுரைகள் எழுதுவதன் நோக்கமாகும்.
ஒருவரது பிறந்த நேரம், நாள், பிறந்த இடம் மட்டுமே எமக்குத் தேவை. சிலர் ஜாதகத்தையே மின்னஞ்சலில் அனுப்புகின்றார்கள். ஜாதகத்தை நாமே எழுதிக்கொள்வோம். கேள்வி ஒன்றுக்கு மட்டுமே நாம் விடையளிப்போம். சிலர் ஒரு ஜாதகத்தை அனுப்பி நான்கு கேள்விகள் கேட்கின்றார்கள். மிக முக்கியமான கேள்வி எது என்று தீர்மானித்துக் கேள்வி அனுப்புங்கள். எமக்குப் பதில் சொல்ல இலகுவாக இருக்கும்.
சிலர் தாங்கள் ஜாதகம் பார்க்கும்போது வேறு சோதிடர் கூறிய கருத்துக்களை எமக்கு அனுப்பி, எமது கருத்தையும் கேட்கின்றார்கள். ஒரு வாசகர் இருசக்கர வாகனத்தை அவர் பயன்படுத்தக்கூடாது என்று சோதிடர் கூறிவிட்டார் என்பதைத் தெரிவித்துக்கொண்டு,எனது அபிப்ராயத்தையும் கேட்கின்றார். ஒரு மருத்துவர் எழுதித்தந்த மருந்து மாத்திரைகளை, இன்னொரு மருத்துவர் வேண்டாம் என்று கூறுவது இங்கே வழக்கமாக உள்ளது. யாராவது ஏன் என்று கேட்கின்றார்களா? இல்லையே! சோதிடரிடம் மட்டும் ஏன் கேள்வி கேட்க வேண்டும்? ஒன்று சோதிடரை நம்புங்கள் அல்லது சோதிடத்தைப் பொருட்படுத்தாதீர்கள்.
சிவகுமார் என்ற வாசகர் முந்தா பற்றி விளக்குங்கள் என்று கேட்டிருக்கின்றார். இதுபற்றிய சில சந்தேகங்களை நாம் முன்னரே எதிர்பார்த்தோம். ஆனால் இன்றுவரை எந்தக் கேள்வியும் வரவில்லை. முதல் வருடத்துக்கான பலனை லக்னத்தின் மூலமும், இரண்டாம் ஆண்டுக்கான பலனை லக்னத்துக்கு இரண்டாம் ராசியின் மூலமும், மூன்றாம் ஆண்டுக்கான பலனை லக்னத்துக்கு மூன்றாம் ராசியின் மூலமும் சொல்ல வேண்டும் என்பதே நீலகண்ட தாஜிக நூலின் குறிப்பு. இதன்படி 1, 13, 25, 37, 49 வருடங்களுக்கு லக்னமே முந்தாவாக இருக்கும். 2, 14, 26, 38, 50 வருடங்களுக்கு லக்னத்தின் இரண்டாம் ராசியே முந்தாவாக இருக்கும். இப்படியே மற்ற வருசங்களுக்கும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் நாம் தந்திருக்கும் உதாரண ஜாதகத்தில் இம்முறையைப் பின்பற்றவில்லை. ஒரு த்வாதசாம்சம் ஒரு வருடத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொண்டுள்ளோம். வராகமிகிரர் தனது ப்ருஹஜ் ஜாதகத்தின் நட்ட ஜாதகாத்யாயத்தில் ஒரு த்வாதசாம்சத்தை ஒரு வருடமாக எடுத்துக்கொள்ளும் ஒரு வழியைச் சொல்லி இருக்கின்றார். நாம் அதை இங்கே பயன்படுத்திக் கொண்டுள்ளோம். இந்த விசயத்தில் நாம் மரபை மீறியுள்ளோம். 17.12.17 தேதிய பிறந்தநாள் தசா பலன்கள் கட்டுரையில் உள்ள ஜாதகத்துக்கு நாம் 26-வது வருடத்துக்கு முந்தாவாக மிதுனராசியின் 18 பாகைகளை எடுத்துக்கொண்டுள்ளோம். ஆனால் நீலகண்ட தாஜிக நூலின்படி, 26வது வருடத்துக்கு முந்தா ரிசப ராசியின் 15 பாகை 27 கலையிலேயே இருக்கும்.
‘மார்பகப் புற்றுநோய்’ என்ற கட்டுரையில் ‘இக்கட்டுரை ஒரு அடிப்படைச் சந்தேகத்தை எழுப்ப வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தோம். ஆனால் யாரும் ஒரு சந்தேகத்தையும் எழுப்பவில்லை. நான்காம் பாவத்துக்கும், ஆறாம் பாவத்துக்கும் ஏற்பட்ட சம்பந்தங்களால் மார்பகப் புற்றுநோய் வந்ததாக எழுதியிருந்தோம். இந்தக் கட்டுரையை வேறொருவர் எழுதி நாம் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், நான்குக்கும், ஆறுக்கும் ஏற்பட்ட சம்பந்தம் ஏன் ஜாதகரின் அம்மாவுக்கு நோயைக் கொண்டு வந்திருக்கக் கூடாது என்று நாம் கேட்டிருப்போம். நான்காம் பாவம் அம்மாவைக் குறிப்பது போலவே வீடு விவசாய நிலங்கள் இவற்றையும் குறிக்கும். எனவே நான்காம் பாவம் கெட்டுப்போனதால் தாயைச் சிறு வயதிலேயே இழந்தவர்களுக்கு வீடு விவசாய நிலங்கள் இவையும் இருக்கக் கூடாதே என்ற கேள்வி எழ வேண்டும். சூரியனுக்கு நான்கு எட்டில் பாபக் கிரகங்கள் இருப்பதால் ஒரு ஜாதகருக்குத் தந்தையின் மரணத்தைச் சொன்னால் அந்த ஜாதகருக்குச் சூரிய தசையும் நல்ல பலனைச் செய்யாது என்று தானே சொல்ல வேண்டும்? இவையெல்லாம் எமக்குச் சிறுவயதிலேயே ஏற்பட்ட சந்தேகங்கள்.
இவைகளுக்கெல்லாம் விடைகளைத் தேடித் தேடித்தான் நாம் கொஞ்சம் சோதிட அறிவைப் பெற்றுக் கொண்டோம். கிரேக்கச் சோதிட அறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சில புள்ளிகள் (நாம் ஏற்கனவே வருசப் பலன்கள் சில முக்கியப்புள்ளிகள் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம்.) இக்கேள்விகளுக்கு விடையளிக்கும் என்று நம்பியதால்தான், நாம் இப்புள்ளிகளை நமக்குத் தரும் நீலகண்ட தாஜிகம் என்ற நூலை 1978ம் ஆண்டிலேயே படித்துச் சில விசயங்களைத் தெரிந்து கொண்டோம்.
மின்னஞ்சல் மூலம் நமக்குக் கேள்விகள் அனுப்பும் வாசகர்களுக்கு சில விசயங்களைத் தெளிவாக்கவே இந்தக் கட்டுரையை நாம் எழுதியுள்ளோம். உங்களுக்காக அல்லது உங்களது பிள்ளைகளுக்காக மட்டுமே கேள்வி கேளுங்கள். நண்பர்களுக்காக உறவினர்களுக்காகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாம் விடையளிப்பதில்லை. ஏனெனில் பிரஸ்ன ஜாதகத்தை நாம் பயன்படுத்துவதால் அடுத்தவர்களுக்காகக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடை கிடைக்காது. வாசகர்களுக்கு எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
This Week’s Quote:
Facts are many, but the truth is one.
- Rabindranath Tagore
ஜோதிடத்தில் நாட்டம் கொண்டுள்ள யாரும் இந்த இணையதளத்தில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.